search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவு கோர்ட்டுகள்"

    கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைப்பதற்கான மத்திய சட்ட அமைச்சகத்தின் வரைவு திட்டம் தயார்நிலையில் உள்ளது. #LawMinistry #SpecialFastTrackCourt
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஆங்காங்கே சிறுமிகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து வருவது தேசத்தை உலுக்கி வருகிறது. அதற்கு முடிவு கட்டுவதற்காக, கடந்த ஏப்ரல் மாதம், அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. பாலியல் சம்பவங்களை விரைவாக விசாரிப்பதும், அதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி தருவதும் இதன் நோக்கம் ஆகும்.

    இந்த அவசர சட்டத்தின் ஒரு பகுதியாக, பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் சிறப்பு விரைவு கோர்ட்டுகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய உள்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்திய பிறகு, இதற்கான வரைவு திட்டத்தை மத்திய சட்ட அமைச்சகத்தில் உள்ள நீதித்துறை தயாரித்துள்ளது.

    வரைவு திட்டம் தயார்நிலையில் இருப்பதாகவும், மத்திய சட்ட மந்திரியின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் மந்திரிசபை செயலாளரிடம் நீதித்துறை தெரிவித்துள்ளது.

    விரைவில் மத்திய மந்திரிசபை கூட்டத்தில், வரைவு திட்டம் பரிசீலனைக்கு வைக்கப்படுகிறது. மந்திரிசபை ஒப்புதல் அளித்தவுடன், விரைவு கோர்ட்டு அமைப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க கீழ்கோர்ட்டுகளுக்கு அனுமதி அளிக்கப்படும். 12 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால், கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

    பாலியல் பலாத்கார குற்றத்துக்கான குறைந்தபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும். அது, ஆயுள் தண்டனை வரை கூட நீட்டிக்கப்படும்.

    பாலியல் பலாத்கார வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும். இதற்கான ஆள்பலம் அளிக்கப்படும். மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும்.

    பாலியல் பலாத்கார குற்ற சம்பவங்களின் புலன் விசாரணைக்காக, விசேஷ தடயவியல் உபகரணங்கள், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் வழங்கப்படும். அரசு வழக்கறிஞர் பதவிக்கு கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவசர சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  #LawMinistry #SpecialFastTrackCourt #Tamilnews 
    ×